இறை இரக்கத்தின் நவநாள்

ஆண்டவர்

"இறை இரக்கப் பெருவிழாவானது பெரிய (மீட்பின்) வெள்ளிக்கிழமை தொடங்கி இறை இரக்க நவநாள்களுடன் இணைந்து வரவேண்டும். மேலும், ஒவ்வொரு நாள்களிலும் அந்நாள்களுக்கான விசேட கருத்துக்காகவும் பிரத்தியேகமாக செபிக்கவும் வேண்டும் ."

என புனித பவுஸ்தீனாவிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் இயேசு,

"இந்த ஒன்பது நாள்களிலும் வெவ்வேறு நிலையிலிருக்கும் ஆன்மாக்களை எனது இரக்கத்தின் ஊற்றண்டை கொண்டு வருவாயாக, ஒவ்வொரு நாளும் எனது பாடுகளின் வல்லமையின் மூலம் வெவ்வேறு நிலையிலிருக்கும் இவ்வான்மாக்கள் அருளைப்பெற எனது தந்தையிடமும் உருக்கத்தோடு மன்றாடுவாயாக. அதனால் அவ்வான்மாக்கள் அருள் வல்லமையினால் புத்துணர்ச்சி பெற்று வாழவும், கடினமான இவ்வுலக வாழ்வில் அவர்களுடைய அன்றாட தேவை எதுவாயினும் அவற்றைப் பெறுவது மட்டுமல்லாமல் அத்துடன் விசேடமாக மரணநேரத்தில் அவர்கள் எனது பரிவருளையும், பரிந்துரையையும் பெறுவார்கள். அது மாத்திரமல்ல, ஒன்பதாம் நவநாளில் எல்லா நவநாள்களிலும் விட மிகக் கடினமான கருத்தைக் கொண்ட இறைநம்பிக்கையில் அலட்சியமாயுள்ள வெதுவெதுப்பானவர்களையிட்டு விசேடமாக மன்றாடுவாயாக. ஏனனில் மற்ற எல்லா ஆன்மாக்களையும் விட ஒலிவத்தோட்டத்தில் நான் "தந்தையே என்னைவிட்டு இத்துன்பக்கலம் நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்" என என்னைக் கடுமையான வேதனைக்கு உட்படுத்திய இவ்வான்மாக்களுக்காகவே கூறினேன்"

என்றும் சொன்னார்.

இறை இரக்க நவநாள் தியானிப்பது எப்படி?

ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறான ஆன்மாக்களுக்காக சொல்லவேண்டிய கருத்துக்கள்: அத்துடன் ஒவ்வொரு நாளிலும் இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.1ம் நாள்: (பெரிய வெள்ளிக்கிழமை)

மனுக்குலம் முழுவதையும் முக்கியமாக கடினமன பாவிகள் அனைவரையும் இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கக் கடலினுள் அமிழ்த்திவிடு. இதனால் ஆன்மாக்களின் இழப்பினால் கசப்பான வேதனையில் மூழ்கி உள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
எம்மீது பரிவு காட்டுவதும், எம்மை மன்னிப்பதும் உமது உயர் இயல்பாமே. எங்கள் பாவங்களைப் பாராதேயும். நாங்கள் உமது எல்லையற்ற நன்மைத்தனத்தில் வைத்துள்ள நம்பிக்கையைப் பார்த்து, எங்களை உமது பரிவன்புமிக்க இதயத்துள் ஏற்று தங்கவைப்பீராக. அதில் இருந்து நாங்கள் ஒரு போதும் விலகிட விடாதேயும். தந்தையுடனும் தூய ஆவியுடனும் உம்மை ஒன்றிக்கும் அன்பி;ன பெயரால் உம்மிடம் இரந்து கேட்கின்றோம்.

என்றும் வாழும் தந்தையே!
இயேசுவின் பரிவுமிக்க இதயத்துள் ஆட்கொள்ளப்பட்ட மனுக்குலத்தின்மீது சிறப்பாக எளிய பாவிகள்மீது உமது இரக்கப் பார்வையை திருப்பியருளும். உம் திருமகனின் துயரமான பாடுகளின் பொருட்டு, உமது இரக்கத்தை இவர்களுக்குக் காட்டியருளும். இதனால் வல்லமைமிக்க உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. (1211) ஆமென்.

இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.


2ம் நாள்: (பெரிய சனிக்கிழமை)

அருட்பணியாளர்கள், திருப்பணியாளர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு
இன்று வந்து எனது ஆழங்கான முடியாத இரக்கத்துள் அமிழ்த்;திவிடு. கசப்பான பாடுகளை நான் தாங்கிக் கொள்ள எனக்கு ஆற்றலாய் இருந்தவர்கள் இவர்கள்தான். வடிகால் வழி போன்ற இவர்கள் மூலம் எனதிரக்கம் மனுக் குலத்தின் பொங்கிப் பாய்கிறது.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
சகல நன்மைகளும் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது பணிக்காக தங்களை அர்ப்பணித்த ஆண்கள், பெண்கள் அனைவரும் பயனுள்ள இரக்கச் செயல்களைச் செய்வதற்கு அவர்கள்மீது உமது அருளைப் பெருகப் பண்ணியருளும். அவர்களின் இச்செயல்களைக் காண்பவர்கள் விண்ணிலிருக்கும் இரக்கத்தின் தந்தையை மகிமைப்படுத்துவார்களாக.

என்றும் வாழும் தந்தையே!
உமது திராட்சை தோட்டத்திற்கு தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீதும், அருட்பணியாளர்கள், திருப்பணியாளர்கள் மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பி உமது வல்லமையின் ஆசியைப் பொழிந்தருளும். உமது மகனின் இதய அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட இவர்களுக்கு உமது வல்லமையையும் ஒளியையும் பகிர்ந்தளித்து பிறரை மீட்பின் பாதைக்கு அழைத்து வரவும், உமது எல்லைற்ற இரக்கத்தை ஒரே குரலில் என்றென்றும் புகழ்ந்து பாடவும் ஆற்றலைக் கொடுத்தருளும். (1213) ஆமென்.


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

3ம் நாள்: (பாஸ்கா ஞாயிற்றுக்கிழமை)

பக்தியும், நம்பிக்கையுமுள்ள ஆன்மாக்களை
இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கக்கடலில் அமிழ்த்திவிடு. சிலுவை பாதை வேளையில் எனக்கு தந்தவர்கள் இவ்வான்மாக்கள். இவர்கள் கசப்பான சமுத்தித்தின் மத்தியில் சிறுதுளி ஆறுதலானார்கள்.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
உமது இரக்கக் கருவூலத்திலிருந்து அளவுக்கதிகமாக உமதருளை எல்லாருக்கும் தாராளமாக பகிர்ந்தளிக்கின்றீர். உமது பரிவுமிக்க இதயத்தினுள் எங்களை ஏற்று அங்கிருந்து ஒருபோதும் விலகிஓட விடாதேயும் என விண்ணக தந்தையின் மீதுள்ள வியப்புக்குரிய அன்பினால் பற்றி எரியும் உமது இதயத்திடமும் நாங்கள் இரந்து கேட்கின்றோம்.

என்றும் வாழும் தந்தையே!
உமது திருமகனால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாக்களை இரக்கதோடு நோக்கியருளும். அவரது துயரமிகுந்த பாடுகளை பார்த்து இவ்வான்மாக்களுக்கு உமது ஆசீரையும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் அளித்தருளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்டுள்ள அன்பு குறையாமலும் நம்பிக்கையின் அளவற்ற நற்செல்வங்களை இழந்து விடாமலும் வானக சேனை அணிகளுடனும் புனிதர்களுடனும் இணைந்து உமது எல்லையற்ற இரக்கத்தைப் போற்றுவார்களாக. (1215) ஆமென்.


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

4ம் நாள்: (பாஸ்கா திங்கள் கிழமை)

இறை நம்பிக்கையற்றவர்களையும் என்னை இன்னும் அறியாதவர்களையும்
இன்று என்னிடம் கொண்டு வா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக் கொண்டேன்.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
நீரே உலகிற்கு ஒளி. இறைநம்பிக்கை அற்றவர்களினதும் உம்மை இன்னும் அறியாதவர்களினதும் ஆன்மாக்களை உமது பரிவன்புமிக்க இதயத்துள் ஏற்றருளும். உமது அருள் ஒளி இவர்களைத் தெளிவு படுத்துவதினால் உமது வியப்புக்குரிய இரக்கத்தை எம்மோடு இணைந்து மேன்மைப்படுத்துவார்களாக. உமது பரிவுமிக்க இதய வீட்டில் இருந்து இவர்கள் தவறிப் போக விடாதேயும்.

என்றும் வாழும் தந்தையே!
இயேசுவின் பரிவுமிக்க இதயத்தினால் ஆட்கொள்ளப்பட்டும் அவரை நம்பாதவர்களையும் உம்மை இன்னும் அறியாதவர்களையும், உமது இரக்கதோடு பார்த்தருளும். இவ்வான்மாக்களை உமது நற்செய்தி ஒளிக்குள் இழுத்தருளும். இவ்வான்மாக்கள் உம்மை அன்பு செய்வதின் பெருமகிழ்ச்சியை அறியாதவர்கள். முடிவில்லாக் காலத்திற்கும் இவர்கள் உமது இரக்கத்தின் பெருந்தன்மையை மேன்மைப் படுத்திட அருள்வீராக. (1217) ஆமென்.


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

5ம் நாள்: (பாஸ்கா செவ்வாய்கிழமை)

திருச் சபையிலிருந்து பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களை
இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்க சமுத்திரத்துள் அமிழ்த்திவிடு. எனது கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், இதயத்தையும் இவர்கள் கிழித்தார்கள். அதுவே எனது திருச்சபை. இவர்கள் திருச்சபையுடன் ஒருமைப்பாட்டிற்கு திரும்புவதனால் எனது காயங்கள் குணமடையும். இவ்வழியாகவே எனது கட்டுக்கடங்கா வேதனையை போக்குவார்கள்

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத் தேடுவோர்க்கு அதை நீர் மறுத்ததில்லை மாறுபட்ட கருத்துடையவர்களையும், பிரிந்துபோன சகோதரர்களையும் உமது பரிவுமிக்க இதயத்துள் ஏற்றருளும். உமது ஒளியால் மீண்டும் இவர்களை திருச்சபைக்குள் இழுப்பதோடு, பரிவுமிக்க உமது இதயத்திலிருந்த அவர்கள் மீண்டும் தவறிவிடாமல் எம்மோடு இணைந்து உமது இரக்கத்தின் மேன்மையை மகிமைப்படுத்திட அழைத்து வருவீராக.

என்றும் வாழும் தந்தையே!
தங்கள் தவறான கருத்துக்களில் ஊன்றி, உறுதியான பிடிவாதத்தினால் உமது ஆசீரை வீணாக்கி, அருளைத் துர்ப்பிரயோகம் செய்து பிரிந்திருக்கும் சகோதரர்களின் ஆன்மாக்களை உமது இரக்கதோடு பார்த்தருளும். உமது திருமகனின் அன்பையும், அவர்களுக்காக அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். மேலும், இயேசுவின் கனிவுள்ள இதயத்தினுள் ஆட்கொள்ளப்பட்டதனால், இவ்வான்மாக்களும் எக்காலத்திற்கும் உமது பேரிரக்கத்தை மகிமைப்படுத்துவார்களாக. (1219) ஆமென்..


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

6ம் நாள்: (பாஸ்கா புதன் கிழமை)

சகல கனிவும் மனத்தாழ்மையுமுள்ள ஆன்மாக்களுக்களையும் குழந்தைகளையும்
இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கத்துள் அமிழ்த்திவிடு. இவ்வான்மாக்கள் எனது இதயத்தை மிகவும் ஒத்தவர்கள். எனது கசப்பான மரணவேதனையின் போது இவர்கள் ஆற்றல் நிறை நிலையானார்கள். எனது பீடங்களை விளிப்போடு காத்திருக்கும் வானதூதர்களை போல் இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மீது எனது அருட்பிரவாகத்தை முழுமையாகப் பொழிகிறேன். தூய்மையான ஆன்மா மட்டுமே எனது அருளைப் பெறுவதற்கு தகுதியுள்ளது. தாழ்மையான ஆன்மாவே எனது நம்பிக்கைக்கு பாத்திரமானது.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
"நான் கனிவும் மனத்தாழ்மையும் உள்ளவன். என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்று நீர் தாமே சொல்லியிருக்கிறீர். கனிவும் மனத்தாழ்மையுமுள்ள ஆன்மாக்களையும். சிறு குழந்தைகளையும் உமது பரிவுமிக்க இதயத்துள் ஏற்றருளும். வானக தந்தையின் அன்புக்குரிய இவர்கள் விண்ணகத்தை பரவசப்படுத்தி, இறை அரியணையின் முன் நறுமலர்களாளத் திகழ்வதனால், இவர்களின் நறுமணத்தில் இறைவனும் மகிழ்ச்சியுறுகிறார். ஓ இயேசுவே, உமது பரிவுமிக்க இதயத்தில் இடம் பெற்றிருக்கும் இவர்கள், உமது அன்பையும் இரக்கத்தையும் இடையறாது துதித்து இசைப்பார்களாக.

என்றும் வாழும் தந்தையே!
இயேசுவின் பரிவுமிக்க இதயத்துள் ஆட்கொள்ளப்பட்ட கனிவுள்ள ஆன்மாக்கள்மீதும், மனத்தாழ்மையுமுள்ள ஆன்மாக்கள்மீதும். சிறு குழந்தைகள்மீதும், உமது இரக்கப் பார்வையை திருப்பியருளும். இவர்கள் உமது திருமகனின் நெருங்கிய சாயலை ஒத்தவர்கள். இவர்களது நறுமணம் பூமியில் இருந்து எழும்பி உமது வான் அரியணையை அடைகின்றது. சகல நன்மைகளுக்கும், இரக்கத்திற்கும் தந்தையே, இவ்வான்மக்களில் நீர் கொண்டுள்ள அன்பிலும், அடையும் இன்பத்திலும், முழு உலகையும் ஆசீர்வதித்தருள உம்மை இறஞ்சுகின்றேன். சகல ஆன்மாக்களும் எம்மோடு இணைந்து உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக. (1221) ஆமென்..


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

7ம் நாள்: (பாஸ்கா வியாழக்கிழமை)

இரக்கத்தை விசேடமாக ஆராதித்து மகிமைப்படுத்தும் சகல ஆன்மாக்களை
இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கத்தில் அமிழ்த்திவிடு. இவ்வான்மாக்கள் எனது பாடுகளின் மீது துயரப்பட்டதோடு எனது ஆவியினுள் மிக ஆழமாக ஊடுருவி உள்ளார்கள். இவர்கள் எனது பரிவுமிக்க இதயத்தின் வாழும் சாயலாவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் பிரகாசிக்கும் ஒளிபோன்ற தூய்மை உடையவர்களாய் துலங்குவார்கள். இவர்களில் ஒருவரும் நரக நெருப்பினுள் போக மாட்டார்கள். மரண நேரத்தில் இவர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பாக பாதுகாப்பேன்.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
அன்பு இதயம் உடையவரே இரக்கத்தின் பெருமையை சிறப்பாக ஆராதித்து மகிமைப் படுத்தும் ஆன்மாக்களை பரிவுமிக்க உம் இதயத்துள் ஏற்றருளும். இறைவனின் மிகுந்த வல்லமையினால் இவர்கள் பலமடைகிறார்கள். உமது இரக்கத்தின் உறுதியுடன் துன்ப துயரங்களோடு முன் தொடரும் இவர்கள் உம்முடன் இணைந்து சகல மனுக்குல துன்பங்களையும் தங்கள் தோள்களில் தாங்குகிறார்கள். இவ்வுலக வாழ்வில் இருந்து பிரியும் போது கடின தீர்ப்பு அடையாமலும் உமது இரக்கம் இவர்களை அரவணைத்துக் கொள்வதாக.

என்றும் வாழும் தந்தையே!
ஆழங்காணா பண்பாகிய உமது இரக்கத்தைப் போற்றி மகிமைப் படுத்தும் இயேசுவின் பரிவு மிக்க இதயத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாக்கள் மீது உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். இவ்வான்மாக்கள் வாழும் நற்செய்தியாவார்கள். இவர்களது கரங்கள் இரக்கச் செயல்களால் நிறைந்துள்ளது. ஆன்ம மகிழ்ச்சியால் பொங்கி இவர்கள் உமக்கு இரக்கப் பாக்களை இசைக்கிறார்கள். ஓ, அதி உன்னதரே! ஓ, இறைவா! அவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப உமது இரக்கத்தை அவர்களுக்குக் காட்டியருள உம்மை இறஞ்சுகின்றேன். இதனால், "எனது சொந்த மகிமையைப் போன்று ஆழங்காண முடியாத எனது இரக்கத்தை ஆராதிக்கும் ஆன்மாக்களை வாழ்விலும் விசேடமாக மணை வேளையிலும் பாதுகாப்பேன்" என்ற இயேசுவின் வாக்குறுதி இவர்களில் நிறைவேறுவதாக. (1225) ஆமென்.


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

8ம் நாள்: (பாஸ்கா வெள்ளிக்கிழமை)

சகல உத்தரிப்பு ஸ்தலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆன்மாக்களையும்
இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கக் கணவாயினுள் அமிழ்த்திவிடு. இவ்வான்மாக்களை சுட்டெரிக்கும் அனலை எனது இரத்தப் பிரவாகம் குளிரச் செய்வதாக. என்னால் இவ்வான்மாக்கள் அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள். இவர்கள் என் நீதிக்கு பரிகாரம் செய்கிறார்கள். இவர்களை விடுவிப்பது உனது கையிலே உள்ளது. எனது திருச்சபையின் கருவூலத்தில் இருக்கும் எல்லா நற்பலன்களையம் இவர்களுக்காக ஒப்புக் கொடு. ஓ! இவர்கள் படும் கடும் வேதனையை நீ உணர்வாயானால் ஆன்மீக தானங்களை தெடர்ச்சியாக ஒப்புக்கொடுத்து எனது நீதிக்கான இவர்கள் கடனை செலுத்துவாயாக.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
"நான் இரக்கத்தையே விரும்புகிறேன்" என நீரே சொல்யிருக்கிறீர். உமது அன்புக்குரியதாயினும் இறை நீதிக்குப் பரிகாரமாக உத்தரிக்கும் ஆன்மாக்களை பரிவுமிக்க இதயத்துள் ஏற்றருளும். இவர்களை தூய்மையாக்கும் அனலை உமது இதயத்திலிருந்து பொங்கிப் பாயும் இரத்தமும் நீருமான அருவிகள் அணைப்பதாக. இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக.

என்றும் வாழும் தந்தையே!
உமது திருமகனின் பரிவுமிக்க இதயத்துள் ஆட்கொள்ளப்பட்டும் பாவப் பரிகரிப்பால் துன்புறும் ஆன்மாக்கள் மீது உமது இரக்கப் பார்வையைத் திருப்பி அருளும். உமது திருமகன் இயேசுவின் துயரமிகு பாடுகளையும் அவரது தூய இதயத்தில் பெருகும் துயரத்தையும் பார்த்து, உமது நீதித் தீர்ப்பில் உத்தரிக்கும் இவ்வான்மாக்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருள உம்மை இறஞ்சுகின்றோம். உமது கருணைக்கும் நன்மைத் தனத்திற்கும் அளவு இல்லை என உறுதியாக நம்பும் நாங்கள் வேறு வழியாக இல்லாததால், உமது அன்புத் திருமகன் இயேசுவின் திருக் காயங்களின் ஊடாக இவர்களை நோக்கி அருள உம்மை வேண்டுகின்றோம். (1227) ஆமென்.


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.

9ம் நாள்: (பாஸ்கா சனிக்கிழமை)

சகல இறையார்வமற்ற (வெதுவெதுப்பான) ஆன்மாக்களுக்களை
இன்று என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கமடையுள் அமிழ்த்திவிடு. இவ்வான்மாக்கள் எனது மிக வேதனையடைந்த இதயத்தை காயப்படுத் தினார்கள். இவ்வான்மக்களினால் தான் ஒலிவத் தோட்டத்தில் பயங்கரமான அருவருப்பான மரணவேதனை அனுபவித்தேன். தந்தையே உமக்கு விருப்பமானால் இப்பாத்திரத்தை என்னிடமிருந்து எடுத்துவிடும் என நான் கதறியதற்கு இவர்களே காரணம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் மீட்படைவதற்கு இவர்களுக்கு உரிய ஒரே எதிர்பார்ப்பு.

பேரிரக்கம் உள்ள இயேசுவே!
நீர் கருணையே உருவானவர்; பரிவன்பு மிக்க உமது இதயத்தினுள் வெதுவெதுப்பான ஆன்மாக்களை நான் கொண்டு வருகிறேன். பேரிரக்கமுள்ள இயேசுவே! உமக்கு அருவருப்பையும் வேதனையையும் தந்த நடைப்பிணங்களைப் போன்ற இவ்வான்மாக்களை உமது தூய்மையான அன்புத் தீயினால் மீண்டும் ஒருமுறை பிரகாசிக்கப் பண்ணியருளும். ஓ அதிபரிவுள்ள இயேசுவே உமது வல்லமையால் ஆகாதது ஒன்றும் இல்லை. எனவே அளவிட முடியாத இரக்கத்தினால் தூய அன்பை இவ்வான்மாக்கள் மீது பொழிந்து இவர்களை உமது ஆர்வமிக்க அன்பினுள் இழுத்தருளும்.

என்றும் வாழும் தந்தையே!
இயேசுவின் பரிவுமிக்க இதயத்தினால் ஆட்கொள்ளப்பட்டும் ஒன்றுக்குமே உதவாத இறையார்வமற்ற ஆன்மாக்கள்மீதும். உமது இரக்கப் பார்வையை திருப்பியருளும். உமது திருமகனின் கசப்பான பாடுகளாலும், அவர் மூன்று மணி நேரமாக சிலுவையில் அனுபவித்த மரண வேதனைகளாலும், இவர்களும் உமது ஆழங்காண முடியாத இரக்கத்தை மகிமைப் படுத்திட அருளவேண்டுமென்று நான் உம்மை இரந்து கேட்கின்றேன். (1229) ஆமென்.


இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லவும்.