இறை இரக்கப் பிள்ளையே!

இறைஇரக்கப் பக்தியின் பெருமையை பலரும் புனித பவுஸ்தீனாவின் தினக்குறிப்பிலிருந்து தொகுத்து பல மொழிகளில், ஏன் தமிழிலும் வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்தும், அவருடைய தினக்குறிப்பில் நான் வாசித்து தியானித்த பகுதிகளையும் இணைத்து, சுருக்கமாகவும் இலகுவாகவும் ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் என்ன சொல்கிறார் என அறிந்து இறை இரக்கத்தின் ஆண்டவரை வழிபடக் கூடிய ஒரு தொகுதியாக இந்த இணையத் தளத்தை சமர்ப்பிக்கின்றோம்.


விசேடமாக திரு நூலில் தேவ அன்னை கூறிய ஒரே வார்த்தை

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா. 2:5)

அதே போல ஆண்டவரும்
"என் கட்டளைகளை ஏற்று கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்புகொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்" (யோவா. 14:21)
மேலும்,
"நீங்கள் என் பெயரால் எதைக்கேட்டாலும் செய்வேன் (யோவா. 14:14)"
என்கிறார். அதே போல பவுஸ்தீனாவிடம் ஆண்டவர்
"என்னைப்பற்றிய ஒவ்வொரு செய்தியையும் நீ இயல்பாகவும். எளிய நடையிலும் மக்களுக்குக் கூறவேண்டும். நீ எவ்வளவு எளிய முறையில் பேசுவாயோ, அவ்வளவுக்கு ஆன்மாக்களை என்பால் ஈர்த்துக் கொள்ள உனக்கு உதவியாக இருக்கும்". (கையேடு: 797)
என்று கூறுகின்றார்.
" ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.(எபே.5:8-9)"
"நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்.(கொலோ.3:1a)"
எனவே;
"நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள் கொடுமைத் தளைகளை அவிழ்ளுங்கள்; நுகத்தின் பிணையல்களை அறுங்கள் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புங்கள் எவ்வகை நுகத்தையும் உடையுங்கள் சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்துங்கள் பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுங்கள் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வாருங்கள் உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுங்கள் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருங்கள்"
என ஏசாயா கூறுவதுபோல் வாழ்ந்து வந்தால்
"நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். (கொலோ.3:12-14)"
"அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும் விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய் அவர் உனக்குப் பதிலளிப்பார் நீ கூக்குரல் இடுவாய் அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார் என ஏசாயா கூறி. என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர். இறை இரக்கத்தை பின்பற்றி நமது ஆன்மீக வாழ்வுக்கான பாதையை அமையுங்கள் அதைத் தயார் செய்யுங்கள் " என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்"
என்று கூறி.
"மேலுலகு சார்ந்தவற்றை நாடுவதனால் உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், "தூயவர்" என்ற பெயரைக் கொண்டவரும் உயர்ந்த தூய இடத்தில் உறைபவரும். நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் வாழ்பவரும் நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கிறவரும். நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தி அவர்களோடு குடியிருக்கும் இறைவன், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமல் எப்பொழுதும் சினம் கொள்ளாமல் அவர் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய நமது மனித ஆவி அவர் திருமுன் தளர்ச்சியடையாமல் நிலை வாழ்வைத் தருவார்."

ஆகவே நீங்களும் இதனை பொறுமையோடு வாசித்து கடைப்பிடித்து இறை இரக்கத்தை வழிபட்டு நிறைவான பலன்களை பெற்றுக்கொள்வீர்களாக.


இதனை இன்று 01.05.2011 முத்திப்பேறு நிலைக்கு உயர்த்தப்படும் திருத்தந்தை 2ம் யோண்போலின் நினைவாக வெளியிடுகின்றோம்.