இறை இரக்க செபம்

செபிப்பதின் உண்மைத் தன்மை:

எல்லாவிதமான போராட்டத்திலும் செபமே ஒரு ஆன்மாவுக்கு வல்லமை மிகுந்த ஆயுதமாகும். ஆன்மாவனது எந்த நிலையில் இருந்தாலும் அது தனது பாதுகாப்பிற்காக செபிப்பதற்கு தகுதியானது. தூய்மையும் வனப்புமுள்ள ஆன்மா கட்டாயம் செபிக்க வேண்டும். அவ்வான்மா செபிக்காவிட்டால் அது தனது வனப்பை இழந்துவிடும். அத்தோடு, தூய்மையைக் காத்துகொள்ள முயற்ச்சிக்கும் ஆன்மா முக்கியமாக செபிக்கவேண்டும். அவ்வாறு செபிக்கத் தவறுமானால் அதை அடையமுடியாமல், காலப்போக்கில் படிப்படியாக தூய்மையை தவறவிட்டுவிடும். புதிதாக மதமாற்றம் பெற்றுக்கொண்ட ஆன்மாவும் தவறாது செபிக்க வேண்டும் ஏனெனில், சுற்றுச்சூழலின் காரணமாக அவ்வான்மா தவறிவிடலாம். முழுமையாக பாவத்தில் அமிழ்ந்தி இருக்கும் ஆன்மாவும் செபிப்பது மிகவும் முக்கியமானது. அதனால் அவ்வான்மா பாவத்தின் தன்மையை உணர்ந்து சிறிதுசிறிதாக பாவத்திலிருந்து மேலெழும்பி விடுபடக்கூடியதாயிருக்கும். எப்பொழுதும், எவ்வேளையிலும் தனிமையிலும் கூட்டாகவும் செபிக்கலாம். அதற்கு எவ்வித வரையறைகளுமில்லை. ஏனென்றால், ஒவ்வொரு தனிப்பட்ட அருளும் அவரவருக்கு செபத்தின்வழியாகவே அருளப்படுகின்றது.(கையேடு 146) எனவே, தவறாது எப்பொழுதும் செபிப்போமாக.

ஆன்ம வேண்டுதல்:

இறைவா! எனது ஒவ்வொரு இதயத்துடிப்பும் உமக்கு நன்றி செலுத்தும் புதுப்பாடலாக மாறட்டும். ஆண்டவரே! உமது இரக்கத்தை ஆராதிக்கும் ஆன்ம பாடலாக எனது குருதியோட்டம் அமையட்டும். ஏனெனில், உம்மை மாத்திரமே நான் நேசிக்கின்றேன்.(கையேடு 1794)

இறை இரக்கத்தின் மூலம் அயலார் பணிபுரிய வேண்டிச் செபம்:

ஓ ஆண்டவரே, அனைத்திலும் மேலான பண்பாகிய உமது இரக்கம், எனது இதயம், ஆன்மா வழியாக என் அயலவரை போய் சேர்வதற்கு உமது இரக்கத்துள் நான் முழுமையாக உருமாறி உமது வாழ்வின் சாயலாக விரும்புகிறேன்.

ஓ ஆண்டவரே! தேற்றத்தினால் என் அயலானை ஒருபோதும் சந்தேகிக்காமலும், தீர்பிடாமலும் என அயலானின் ஆன்மச் சிறப்பை என் கண்கள் இரக்கத்தோடு நோக்கி, அவர்களை ஆபத்தில் விடுவிக்க எனக்கு உதவியருளும்

ஓ ஆண்டவரே! என் அயலாரின் தேவைகளில் நான் கவனம் செலுத்தவும், அவர்கள் புலம்பல், வேதனைகளை அலட்சியம் செய்யாமல் என் காதுகள் இரக்கத்துடன் கேட்பதற்கும் எனக்கு உதவியருளும்.

ஓ ஆண்டவரே! என் அயலாவரை ஒரு போதும் நான் எதிர்மாறாக பேசாமல், அனைத்திலும் மன்னிக்கும், ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளைக் கூறிட எனது நாவு இரக்கம் உள்ளதாக எனக்கு உதவியருளும்.

ஓ ஆண்டவரே! எனது கரங்கள் நற்செயல்களால் நிறைந்து இரக்கமுள்ளதாகி, அயலவரின் கஷ்ரமும், பிரச்சனையுமான தேவைகளில் அவர்களுக்கு நல்ல சேவை செய்ய எனக்கு உதவியருளும்.

ஓ ஆண்டவரே! சொந்தக் களைப்பையும், சோர்வையும் பொருட்படுத்தாது எனது கால்கள் இரக்கத்தோடு செயல்பட்டு, எனது அயலாவர்க்கு உதவி செய்ய விரைந்திடவும் எனக்கு உதவியருளும். பிறர் சேவையே எனது உண்மை ஆறுதல்.

ஓ ஆண்டவரே! எனது இதயம் இரக்கமுள்ளதாகி, அயலாரின் வேதனை துன்பங்களை உணரவும், எவரையும் நான் இதயத்தால் வெறுக்காமலும், அவர்கள் என்னை வெறுத்தாலும் நான் அவர்களை நேசித்து பணிவடன் ஏற்கவும், உமது இரக்கம் மிக்க இதயத்துள் என்னை சிறைப்படுத்தி விடவும். எனது சொந்த வேதனை, துன்பங்களை நான் அமைதியோடு தாங்கி ஏற்றுக் கொள்ள ஓ ஆண்டவரே! உமது இரக்கம் முழுமையாக என்மீது பொழிய உதவியருளும். ஆமென்.

ஓ என் இயேசுவே! என்னை முழுமையாக உம்மைப்போல் உருமாற்றியருளும். உம்மால் எல்லாம் கூடும் (கையேடு 163)

பாவிகளுக்காக வேண்டுவோமாக:

ஓ இயேசுவே! என்றும் வாழும் உண்மையே!! எங்கள் வாழ்வே! நான் எளிய பாவிகளுக்காக உமது இரக்கத்தைக் கெஞ்சுகிறேன். ஓ நிறை பரிவும் அளவற்ற இரக்கமும் உள்ள என் ஆண்டவரின் இனிமை மிகு இதயமே! எளிய பாவிகளுக்காக உம்மை இறஞ்சுகிறேன். மகா பரிசுத்தமுள்ள திரு இருதயமே! எண்ணிலடங்கா அருட்கதிர்களை முழு மனுக் குலத்தின் மீதும் பொழியும் இரக்கத்தின் ஊற்றே! எளிய பாவிகளுக்காக உமது ஒளியை இறஞ்சுகிறேன். இயேசுவே! கசப்பு நிறைந்த உமது திருப் பாடுகளைப் பார்த்து, விலைமதிப்பற்ற உமது திரு இரத்தத்தை கொடுத்து மீட்டெடுத்த ஆன்மாக்களை அழிவுற விடாதேயும். ஓ இயேசுவே! கணக்கிட முடியாத பெறுமதி மிக்க உமது திரு இரத்தத்தின் ஒரு துளி மட்டுமே சகல பாவிகளின் மீட்புக்கு போதுமானது என உணரும்போது நான் அக மகிழ்கிறேன். கொடூர நரகத்துக்கு உரியதும் அருவருப்பானதும், நன்றி கெட்ட பாவமாக இருந்தாலும் அதற்கு ஈடாக நீர் செலுத்திய பெறுமதி அவைகளோடு ஒருபோதும் சமனாகாது. எனவே உமது திருப் பாடுகளை நம்பும் சகல ஆன்மாக்களும், வானமும் பூமியும் மாறலாம். இறைவன் அவரது இரக்கத்தை ஒருவருக்கும் ஒருபோதும் மறுப்பதில்லை என்பதால், இறை இரக்கம் ஒரு போதும் குறையாது என முழு நம்பிக்கை வைக்க அருள்வீராக. ஓ உமது ஒப்புயர்வற்ற நன்மைத் தனத்தை நான் தியானிக்கையில் எனதான்மா எத்துணை பேருவகை கொள்கிறது. ஓ இயேசுவே! எக்காலத்திற்கும் உமது இரக்கத்தை போற்றி மகிமைப் படுத்தும் படியாக சகல பாவிகளையும் உமதண்டை அழைத்துவர விரும்புகின்றேன். ஆமென். (கையேடு 1.30,(72)

திருச் சிலுவையின் மேல் உயர்த்தப்பட்ட என் இயேசுவே உமது தந்தையின் பரிசுத்த சித்தத்தை எவ்வேளையிலும், எங்கும், சகல காரியங்களிலும் நம்பிக்கையோடு செய்வதற்கு உமது அருளைத் தந்தருளும். ஆயினும் எப்போதாவது இறை சித்தத்தை நிறைவேற்றுவது மிகக் கடினமானதாகவும், அதைரியமூட்டுவதாகவும் நான் உணரும்போது இயேசுவே உமது வல்லமையும் ஆற்றலும் உமது திருக் காயங்களின் வழி என்மீது வழிந்து என்னைத் திடப்படுத்த எனது உதடுகள் தொடர்ந்தும் "ஆண்டவரே உமது திருவுளம் நிறைவேறட்டும்" என்று கூறிக் கொண்டிருக்கட்டும் என இறஞ்சுகிறேன்.

ஆ உலகின் மீட்பரே! மானிட மீட்பின் நேசரே!! பயங்கர வாதை வேதனையின் போது ஆன்மாக்களின் மீட்பை எண்ணி உம்மை மறந்தீரே. ஓ அதி பரிவன்புள்ள இயேசுவே உமது தந்தையின் திருச் சித்தம் நிறைவேற்றுவதற்கு நீர் ஆற்றிய அம்மீட்புப் பணியில் நானும் தன்னலம் மறந்து ஆன்மாக்கள் வாழ்வு பெறுவதற்கு உமக்கு உதவ உமது அருளை எனக்கும் தந்தருளும். ஆமென். (கையேடு 1265)

நம்பிக்கை வேண்டுதல்கள்:

பரிவன்பு மிக்க இறைவா! நீர் ஒருவரே நல்லவர். எங்கள்மீது இரக்கமாயிரும். எனது துன்ப துயரம் அதிகமாயினும், குற்றங்கள் மிகுதி ஆயினும் நீரே இரக்கத்தின் இறைவன் ஆகையால் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். விண்ணிலோ மண்ணிலோ உமது இரக்கத்தை நம்பிய ஒரு ஆன்மாவும் ஏமாற்றம் அடைந்ததாக நினைவுக்கு எட்டாத காலத்திலிருந்து கேள்விப்பட்டது இல்லை.

ஓ பரிவிரக்கம் உள்ள இறைவா! மிகக் கொடிய பாவியாயினும் ஒருவருக்கும் ஒருபோதும் எதுவும் மறுக்கப் படவில்லை. நான் உமது இரக்கமுள்ள இதயத்தை அண்டி ஒப்புரவாகி வேண்டும்போது என்னை நீர் புறக்கணிக்க மாட்டீர். நீர் ஒருவரே என்னை நியாயப் படுத்த முடியும். (கையேடு 1730)

(அமைதியில் சொந்தத் தேவைகளைக் சொல்லவும்)

ஓ என் இறைவா! எனது ஒரே எதிர் பார்ப்பே, நான் ஒருபோதும் ஏமாற்றம் அடைய மாட்டேன் என தெரிந்து எனது முழு நம்பிக்கையையும் உம்மீது வைக்கிறேன். (கையேடு 317)

உமது இரக்கத்தின் முழு வல்லமையை அறிந்த நிர்பாக்கிய பிள்ளையாகிய எனது தேவைகள் அனைத்தையும் தந்தருளுவீர் என நான் நம்புகிறேன். (கையேடு 898)

ஓ இயேசுவே! பீடத்தில் திரு அருட்சாதனத்தில் மறைந்துள்ள எனது அன்பும் இரக்கமும் ஆனவரே, எனது ஆன்ம, உடல் தேவைகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கின்றேன். இரக்கமுள்ள உம்மால் தான் எனக்கு உதவ இயலும் என எதிர் பார்த்து இவ்வேண்டுதலை சமர்ப்பிக்கின்றேன்.
ஆமென். (கையேடு 1751)