ஆதியில் இருந்த இறை இரக்கம்

ஆதியிலிருந்தே இறைவன் தனது இரக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என திருவிவிலியம் (வேதாகமம்) நமக்கு தொடக்க நூலிருந்து திருவெளிபாட்டு நூல் வரைக்கும் எடுத்தியம்புகின்றது. அதை இன்றுமாக நமக்கு இறைவார்த்தை வழியாக கூறிக்கொண்டே இருக்கின்றது.

ஆதியில் ஆதாமுடைய பெலவீனத்தை அறிந்துகொண்ட இறைவன் அவனுக்கு கடவுளைப் போல் ஆக வேண்டுமென்ற நிலையை கீழ்படியாமையால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிவுறுத்தி அத்தோடு படைப்புக்கள் அவனுக்கு கீழ்படியாது எனக் கண்டு அவனை நிலத்தைப் பண்படுத்தி உணவு வகைகளைப் பெருகச் செய்யும் வழிமுறையை சொல்லிக் கொடுத்தார். ஏவாளிடத்தில் மறைவான முறையில் உருவாக்கும் மனிதனை வெளிக்கொணர்வதற்கான வழி முறையையும் அறிவுறுத்தினார்.

இதன்போதும் ஆதாமும் ஏவாளும் இறை இரக்கத்தின் மகிமையை உணராமல் மன்னிப்பை கேட்காமல் தற்பெருமை, கீழ்படியாமை, பேராசை ஆகிய குணங்களினால் தங்கள் தீர்ப்பை தாங்களே நிர்ணயித்துக் கொண்டார்கள். அங்கு இறைவனின் இரக்க பண்பை மனிதன் புரிந்துகொள்ளாமல் தன்வழியே நடந்து துன்பத்திலும் வேதனையிலும் மூழ்கியதாக வாசிக்கின்றோம்.

மேலும், காயின் தன் சகேதரனைக் கொலை செய்ததை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அவன் தன்னுயிர் பாதுகாப்பிற்கு அஞ்சி இறைவனை வேண்டியபோது அவனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் இரக்கத்தையும் நாம் அறிகிறோம்.

ஆபிரகாம் வாக்குறுதியின் மூலம் பெற்றுக்கொண்ட மகப்பேறு விடயத்தில் தவறான போக்கைக் கடைப்பிடித்திருந்தாலும் தமது அருளிரக்கத்தால் அவருக்கு அவ்வாக்குறுதியின் வழியாக மீண்டும் மகப்பேறு அளிக்கும் இரக்கத்தையும் காண்கின்றோம். தொடர்ந்து ஆபிரகாமின் பேரனான யாக்கோபுவை தேர்ந்தெடுத்து இஸ்ரயேல் என்னும் பேரினமாக மாற்றியதோடு அவர்கள் தாங்கள் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ளவதற்காக அடிமைகாளாக்கினாலும், அவர்களது பராமரிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஏற்பாடுகள் செய்த இரக்கத் தன்மையையும் காண்கின்றோம். மோசே அரசகுலத்தினரோடு சேர்ந்து சகலத்தையும் கற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்து தாம் இரக்கம்காட்டும் மக்களினத்தை விடுவித்து அவர்களை அடிமைப் படுத்தியவர்களை அவர்கள் கண்முன்னாலேயே அழித்து தாம் இரக்கத்தின் தேவன் எனக் காட்டுகின்றார்.

ஆயினும் அவர்களை வழிநடத்தியவர்கள் இயேசுவின் காலம் வரை தவறான கோட்பாடுகளையும் பிழையான ஒழுங்கு முறைகளையும் கடைப்பிடித்ததோடு இறைவனின் நியமங்களை விட்டு தங்கள் நியமங்களினால் மக்களை இறை அன்பிலிருந்து பிரித்து இறைவனை கொடுமையானவராகக் காட்டிவந்தார்கள். இதனால் தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களை தாமே முன்னின்று மீட்டு இறையன்பில் வாழ்வது எவ்வாறு என வாழ்ந்து காட்டும் பொருட்டு கீழ்ப்படிதலுக்கு முன்மாதியாக மரியாவையும் உருவாக்கி, இறைவனும் தாமே மனிதனாக இயேசு என்னும் பெயருடன் உலகில் உருவெடுத்து இறையுறவை வாழ்ந்து காட்டினார்.

அப்படி வாழ்ந்த வார்த்தையானவர் அனைத்து வழியிலும் உண்மையான இறையுறவு என்ன என்பதை எடுத்துக்காட்டி என்றும் இறைவனின் அன்பிரக்கத்தில் இணைந்து நிலையான, அழிவில்லாத, முடிவற்ற, ஒளியான வாழ்வை வாழும் முறையை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல சிலரைத் தெரிந்தெடுத்து கற்பித்து பயிற்சிகளோடு அனுபவங்களையும் கொடுத்து, அவ்வாழ்வின் முறை வழியாக தடைகள், துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள், பிரச்சனைகள் எதுதான் வந்தாலும், துணிவோடு துன்புறுத்துவோருக்காக செபிக்கவும், இரக்கம் காட்டவும் கற்பித்தது மட்டும் அல்லாமல் தாம் சிலுவையிலே உயிர்விடும் வேளையில் தம்மை சிலுவையிலே அறைந்து துன்புறுத்திய அனைவரையுமே அறியாமல் செய்கிறார்கள் என்று பரிந்துபேசி மன்னிக்கவேண்டி மனந்திரும்பிய கள்வனுக்கு விண்ணரசு அருளி அனைத்திலும் இரக்கத்தை வெளிப்படுத்தி அதன் வழியாக இறையன்பும் பிறரன்பும் என்ன என்பதை அனுபவரீதியாக உணர்த்தி அச்சீடர்களை மரியாவின் அரவணைப்பில் ஒரே குழுமமாக உருவாக்கி (திருச்சபை) அவர்களின் வாயிலாக அனைத்து உலகத்தினருக்கும் கற்பிக்க ஏற்பாடு செய்யலானார்.

அத்திருச்சபை தனக்கு இயேசு கொடுத்த அனுபவங்களின் மூலம் அதை அனைத்துலகத்திற்கும் வெளிப்படுத்தி வந்தது. அதையே படிப்பினைகளின் வழியாக கற்றுக் கொண்டு வாழும் நாம் இறைவன் நம்மோடு என்னும் உணர்வை விட்டு விலகி உலகரீதியான வழியில் சென்று கொண்டு இருந்ததனால், இயேசுவே பல முறைகளில் காட்சிகள் வழியாக ஆலோசனைகளைத் தந்து இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வை நாமும் மனந்திரும்பி தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்பும் இரக்கத்தின் வெளிப்பாடுகளில் இது இறுதியானதுதான்